முதல் டெஸ்ட் : மழையால் தாமதமாகும் இந்தியாவின் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, மழை
பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது.

கே.எல்.ராகுல் 84 ரன்களும் ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில், ராபின்சன் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், தனது 21-வது சதத்தை நிறைவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஷர்துல் தாகூர், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி்னர்.

இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 26 ரன்னில், பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா, புஜாரா ஆகியோர் தலா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெற்றிக்கு மேலும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்க வேண்டும். ஆனால், நாட்டிங்காமில் மழை பெய்துவருவதால் போட்டி தொடங்குவது தாமதமாகி உள்ளது. இந்திய வீரர்கள் இன்றையை ஆட்டத்தில் நிதானமாக செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.