தன் பெயர் சாதனை பட்டியலில் இருப்பது வியப்பாக உள்ளது என்று கூறிய சஞ்சய் மஞ்சரேக்கருக்கு முரளி விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய – ஆஸ்திரேலியா இடையயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது திரையில் ஓர் புள்ளி விவரப் பட்டியல் வெளியானது. இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில், அரை சதம் அடித்தவுடன் அதை சதமாக மாற்றும் விகிதம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 60% என்ற அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி விஜய் முதல் இடம் பிடித்திருந்தார்.
முகமது அசாருதீன் 2வது இடத்தையும், பொல்லி உம்ரிகர் 3வது இடத்தையும், ரோஹித் சர்மா, விராட் கோலி முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்திருந்தனர். இதைக் கண்டவுடன் வர்ணணையில் இருந்த சஞ்சய் மஞ்சரேக்கர், “இந்தப் பட்டியலில் ரோஹித் உள்ளிட்ட வீரர்களுடன் முரளி விஜய் பெயர் முதலிடத்தில் இருப்பது வியப்பாக உள்ளது.” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முரளி விஜய் தன் டிவிட்டர் பக்கத்தில், “மும்பையைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களுக்கு தென் பகுதியில் உள்ள வீரர்கள் சாதனையை எப்போதும் புகழ்ந்து பேச முடியாது.” என்று கூறியுள்ளார். மஞ்சரேக்கருக்கு முரளி விஜய் அளித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முரளி விஜய் சமீபத்தில் தான், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சஞ்சய் , “இந்தப் பட்டியலில் முரளி விஜய் இருப்பது மிகவும் நல்ல விஷயம். சொந்த மண்ணில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அரை சதத்தை, சதமாக மாற்றுவதில் உண்மையிலும் சிறப்பான சாதனை. ஆனால், இதுபோன்ற அபார பங்களிப்பை வழங்கிய வீரர்களை மறந்துவிடுகிறோம்.” என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








