பாரிஸ் ஒப்பந்த நிதி உறுதிமொழிகளை நிறைவேற்ற வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை வளர்ந்த நாடுகள் முறையாக வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!

துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்று வரும் 31-வது ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாடான COP31-ல் இந்தியா தனது தொடக்க உரையை நிகழ்த்தியது. இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் நரேந்திர பூஷண் பேசுகையில், 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 9.1-வது பிரிவைச் சுட்டிக்காட்டினார். அதன்படி, வளரும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்க வேண்டிய பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலான திட்டங்களைச் செயல்படுத்தவும் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

எந்த நாடும் பின்தங்கிவிடக் கூடாது!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு (UNFCCC) மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் சமமான குரல் வழங்கும் உள்ளடக்கிய தளங்களாக இருப்பதாக நரேந்திர பூஷண் குறிப்பிட்டார். மேலும், சமத்துவம் மற்றும் நாடுகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் கொள்கையின் அடிப்படையில் இந்தியா இந்தச் செயல்முறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகக் கூறினார். உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும் அபாயம் அதிகரித்து வருவதால், அனைத்து நாடுகளுக்கும் சமமான வாய்ப்பும் நிதி ஆதரவும் கிடைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கூட்டு முயற்சியில் எந்த நாடும் பின்தங்கிவிடக் கூடாது என்றும், உலகளாவிய பருவநிலை நடவடிக்கைகளில் இந்தியா தனது நியாயமான பங்களிப்பை வழங்கும் அதேவேளையில், நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் கோரிக்கை!

வளரும் நாடுகள் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தொழில்நுட்பப் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்பங்களின் அதிகப்படியான செலவு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தகம் தொடர்பான தடைகள் களையப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் வளரும் நாடுகளுக்கும் தூய்மையான தொழில்நுட்பங்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா கோரியுள்ளது.

கடன் சுமையில்லாத நிதியுதவி!

இதற்கு முன்னதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், COP31 மாநாட்டில் இந்தியாவின் பேச்சுவார்த்தை முன்னுரிமைகள் குறித்து விளக்கியிருந்தார். அப்போது, வளரும் நாடுகளுக்கு கடன் சுமையை அதிகரிக்காத வகையில், கணிக்கக்கூடிய, பெரும்பாலும் பொதுநிதி மற்றும் சலுகை அடிப்படையிலான பருவநிலை நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் எனத் தெரிவித்தார். மேலும், COP31 மாநாட்டில் பருவநிலை நிதிப் பணித் திட்டத்தை (Climate Finance Work Programme) தொடங்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் COP31 மாநாடு!

இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள COP31 மாநாடு, இந்த வாரத் தொடக்கத்தில் துருக்கியின் மத்திய தரைக்கடல் கடற்கரை நகரமான அன்டால்யாவில் தொடங்கியது. ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலைகள், நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு, பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அழுத்தம் உலக நாடுகளுக்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மாநாட்டை நடத்தும் துருக்கி, போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் மின்மயமாக்கலை விரைவுபடுத்தும் தன்னார்வத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன்படி, 2035-ம் ஆண்டுக்குள் உலகளாவிய எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கை 35 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.