மேற்கு ஆசியாவில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.
மேலும், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகள் உள்ளிட்ட சிவில் கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கியது. இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதாரச் சொத்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதியையும், பாப் எல் மண்டேப் (Bab-el-Mandeb) ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பாதிக்கும் என இந்தியா எச்சரித்துள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக் குழுவினர், சவுதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு எண்ணெய் குழாயையும் தாக்கியுள்ளனர். கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்தக் குழாய் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஈரான் தொடர்பான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தக் குழாய் மாற்று வழியாகச் செயல்பட்டு வருகிறது.
இதனால், பாப் எல் மண்டேப் கடல்வழிப் பாதையின் பாதுகாப்பு குறித்த கவலையும் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி மற்றும் அரேபிய தீபகற்பத்திற்கு இடையே அமைந்துள்ள இந்த ஜலசந்தி, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடலை இணைக்கும் உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாகும்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் தாக்குதல்கள், ஹார்முஸ் மற்றும் பாப் எல் மண்டேப் ஜலசந்திகள் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துக்கும், இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கடற்பணியாளர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவில் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.




