இந்திய பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முழுஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது.…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக முழுஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது. இது நடப்பு நிதி ஆண்டில் 9.5 சதவீத வளர்ச்சியை அடையும் என்றும், 2022 ஆம் ஆண்டில் இது 8.5 சதவிகிதமாக இருக்கும் எனவும் சர்வதேச நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

’இந்தாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பில் எங்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை. கடுமையான கொரோனா 2 வது அலையில் இருந்து இந்தியா, மீண்டு வந்திருக் கிறது. இதன் காரணமாக ஜூலை மாதம் பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால், இப்போது எங்கள் கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்’ என்று சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பொருளாதார வளா்ச்சி 2021-ல் 6 சதவிகிதமாகவும், 2022-ல் 5.2 சதவிகிதமாகவும் இருக்கும் எனவும் சீனா, நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 5.6 சதவிகிதமும் பொருளாதார வளர்ச்சி காணும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 5.9 சதவிகிதமும், அடுத்த நிதி ஆண்டில் 4.9 சதவிகிதமும் வளர்ச்சி அடையும் எனவும் சர்வதேச நிதியம் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.