உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் தொடரும்: இந்தியா

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும், உதவிகள் தொடரும் என்றும் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு அவையில் விளக்கம்:  உக்ரைனுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தியா அளித்து…

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும், உதவிகள் தொடரும் என்றும் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு அவையில் விளக்கம்: 

உக்ரைனுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தியா அளித்து வரும் உதவிகள் குறித்து ஐநா பாதுகாப்பு அவையில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் விளக்கம் அளித்தார்.

உக்ரைனுக்கு 11 முறை உதவிப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன:

அப்போது, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு இதுவரை 11 முறை மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் உதவிகள் தேவைப்படுவதாக உக்ரைன் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அந்நாடு கோரிய குறிப்பிட்ட வகையான மருந்துகள், ஆழமான காயங்களுக்கு கட்டு போட பயன்படும் Hemostatic bandages போன்றவற்றை அனுப்பிவைக்க இந்தியா தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேவைப்படும் நாடுகளுக்குகெல்லாம் உதவும் இந்தியா:

உலகின் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்பியதை சுட்டிக்காட்டிய ருச்சிரா கம்போஜ், கொரோனாவுக்கு முன்பும் பல நாடுகளுக்கு இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்பி உதவியதை குறிப்பிட்டுப் பேசினார்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 18 லட்சம் டன் கோதுமையை, ஆப்கனிஸ்தான், மியான்மர், சூடான், யேமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த ருச்சிரா காம்போஜ், உலகம் எப்போதெல்லாம் உணவு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவும் நாடாக இந்தியா இருந்து வருகிறது என குறிப்பிட்டார். இத்தகைய உதவிகளை இந்தியா இனியும் தொடரும் என்றும் அவர் ஐநா பாதுகாப்பு அவைக்கு உறுதி அளித்தார்.

உக்ரைன் – ரஷ்யா போருக்கு கடும் கண்டனம்:

உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீண்டுகொண்டே இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதனால், ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது உலகின் வளரும் நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எனவே, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் போர் தொடருவதை இந்தியா கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.