நாடு முழுவதும் 1.94 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 11 % அதிகமாகும்.
நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 1.94 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தினசரி பாதிப்பு விகிதம் 11 % ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல 60,405 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,45,70,131 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,84,213 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,21,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சூழலில் நாடு முழுவதும் முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.
அதேபோல ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், நாடு முழுவதும் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,805 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,281 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும், டெல்லியில் 546 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







