இலங்கைக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், க்ருனல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தள்ளிவைக்கப்பட்ட 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், சக்காரியா ஆகிய நான்கு பேர் அறிமுகமாயினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கெய்க்வாட் 21 ரன்னிலும், கேப்டன் ஷிகார் தவான் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே குவித்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஷனாகா 3 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 11 ரன்னிலும், சதீரா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தனஞ்சயா டி சில்வா நிலைத்து நின்று ஆட, கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. இதனை இலங்கை வீரர்கள் 2 பந்துகள் மீதம் வைத்து எளிதில் எட்டினர். இதன் மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.










