ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை இந்தியா லெஜண்ட்ஸ் அணி வென்றுள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற, உலக அணிகள் பங்கேற்கும், ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் 2022ன் இறுதிப் போட்டி ராய்ப்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணியும், திலகரத்ன தில்ஷன் தலைமையிலான இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய லெஜன்ட்ஸ் அணி,
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய லெஜன்ட்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான நமன் ஓஜா, 71 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி, தொடக்கம் முதலே நிலையான ஆட்டமின்றி தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக இஷான் ஜயரத்ன அரைசதம் கண்டார். சிறப்பாக பந்துவீசிய வினய் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிமன்யு மிதுன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எனவே இந்திய லெஜன்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சதம் விளாசிய நமன் ஓஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகனாக இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் திலகரத்ன தில்ஷன் தேர்வு செய்யப்பட்டார்.
ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் 2020-21ல் இந்தியா லெஜன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.