கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா இலங்கைக்கு ரூ.14,643 கோடி கடன் கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அந்நாட்டிற்கு இந்தியா பொருளாதார உதவிகளை அளித்து வருகிறது. இது குறித்து திமுக எம்பி ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், கடந்த 10 ஆண்டுகளில், 8 துறைகளில் இந்தியா, இலங்கைக்கு ரூ. 14,643 கோடி கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோலியம், உரம் ஆகிய துறைகளில் இந்த கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் இந்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப, இலங்கைக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை 6ம் தேதி வரை இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்கன் டாலர் கடனுதவியாக வழங்கி இருப்பதாகத் தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவிடம் இருந்து உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு கடனாக இறக்குமதி செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மனிதாபிமான ரீதியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருட்களும், 15 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணையும், 55 மில்லியன் டாலர் மதிப்பிலான உரங்களையும் இந்தியா இலங்கைக்கு இலவசமாக அளித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.









