இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் நிதியமைச்சர் பொறுப்பையும் தானோ ஏற்றுள்ளார் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் அல்லல்படும் அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கிளர்ச்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 134 எம்.பிக்களின் ஆதரவுடன் ரணில் விக்ரம சிங்கே அதிபராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாஜன ஏக்சாத் பெரமுனா கட்சியின் தலைவரும், தனது பள்ளி தோழருமான தினேஷ் குணவர்த்தனேவை இலங்கையின் பிரதமராக அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்தார். தினேஷ் குணவர்த்தனே உள்பட 18 பேர் கொண்ட அமைச்சரவை இன்று அதிபர் முன்பு பதவியேற்றுக்கொண்டது.
அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவிற்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இருவர் அமைச்சர்கள் ஆகியுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடல் வளங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் நசீர் அகமது அமைச்சராகியுள்ளார்.
இலங்கையை பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டிய சவாலுடன் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, நிதி இலாகாவை தன்னகத்தே வைத்துள்ளார். தனக்கு உதவுவதற்காக துணை அமைச்சர் ஒருவரை அதிபர் நியமிக்கலாம் எனக் கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உடனடி நடவடிக்கையாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்திலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கே ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த முக்கியமான பணியை தொடர்வதற்காக நிதி இலாகாவை தானே கவனித்துக்கொள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இலாகாவை கவனித்து வந்த ஜி.எல்.பெரிஸ் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அலி சாப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் நடந்தபோது ஜி.எல்.பெரிஸ், டலாஸ் அழகப்பெருமாவை அதிபர் பதவிக்கு முன்னிறுத்தினார். இந்நிலையில் ஜி.எல்.பெரிஸ் தற்போது அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,







