ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ஆப்கனிஸ்(ஆப்கன் பணம்) நிதி உதவி வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்கனிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 610 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைக்கான துணை அமைச்சர் மெளல்வி ஷராஃபுதின் முஸ்லிம் தெரிவித்துள்ளார்.
எனினும் உள்ளூர் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக ஆப்கனின் டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
பாக்டிகா மாகாணத்தின் கியான், நிகா, பார்மல், ஜிரோக் மாவட்டங்களிலும், கோஷ்ட் மாகாணத்தின் சிபிரி மாவட்டம் மற்றும் நங்கார்கர் மாகாணத்தின் அச்சின் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மெளல்வி ஷராஃபுதின் முஸ்லிம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக் தெரிவித்தார்.
இதற்காக மீட்புக் குழுவினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தொலைத் தொடர்பு வசதி போதுமானதாக இல்லாததால், பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்ட பேரிடர் மேலாண்மைக்கான துணை அமைச்சர் மெளல்வி ஷராஃபுதின் முஸ்லிம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ஆப்கனிசும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ஆப்கனிசும் நிவாரணமாக அளிக்கப்படும் என்றார்.
மிகப் பெரிய பேரிடர் ஏற்பட்டிருப்பதால் உலக நாடுகள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள மெளல்வி ஷராஃபுதின் முஸ்லிம், இதுபோன்ற ஒரு பேரிடரை எந்த ஒரு நாடும் தனித்து சமாளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய நிலநடுக்கம் இது என தெரிவித்துள்ள ஆப்கன் அரசு, உலக நாடுகளின் உதவி தங்களுக்கு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளது.












