இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை இன்று கூடியதும், சீனா எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து அவைத் தலைவர் இருதரப்பையும் பேசுமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சீன விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அநாகரீகமாக பேசியதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆதாரமற்ற விஷயங்களை பேசி பொய்களை முன்வைக்க கார்கே முயற்சிக்கிறார் எனக்கூறிய அவர், நாட்டு மக்களிடம் மல்லிக்கார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கூற்று உண்மை என்பதை கார்கே காட்டுகிறார் என சாடிய அவர், மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்கும் வரை அவர் நாடாளுமன்றத்தில் இருக்க உரிமை இல்லாதவர் என குறிப்பிட்டார்.
அப்போது, மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒற்றுமை நடைபயணத்தில் தான், அரசியல் ரீதியாக பேசினேன் என்று தெரிவித்தார். மாநிலங்களவைக்கு வெளியே பேசியதை அவையில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவிற்கு பங்கு இல்லை என்று தம்மால் அழுத்தமாக கூற முடியும் என தெரிவித்தார்.
கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறி மாறி கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.