சுதந்திர தினம் – காஷ்மீரில் ஊற்றெடுத்த உற்சாகம்

நாட்டின் 76வது சுதந்திர தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.   ஆண்டுதோறும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுதந்திர…

நாட்டின் 76வது சுதந்திர தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

 

ஆண்டுதோறும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுதந்திர தின கொண்டாட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் சம்பிரதாய அளவில் நடந்து முடிவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, விசேஷமாக சுதந்திர தினத்தைக் கொண்டாட மத்திய அரசு வழிவகைகளை மேற்கொண்டது.

ஆகஸ்ட் 13, 14, 15 என 3 நாட்களுக்கு அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதோடு, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் பல பகுதிகளிலும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டிய சாலையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதேபோல், குப்வராவில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான பள்ளிச் சிறுவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்குச் சென்று விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.

குப்வாராவில் பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி அது குறித்த வீடியோக்களை பெருமிதத்துடன் வெளியிட்டனர்.

சிறுவர்களும் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு சாலைகளில் ஓடும் காட்சியையும் பார்க்க முடிந்தது.

கத்துவா நகரில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, பள்ளி மாணவர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.

ஜம்மு காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியபடி தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீநகரின் மையப் பகுதியான லால் சவுக், மூவர்ணங்களைக் கொண்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மெருகூட்டியது.

இன்று நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஸ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் வாகனத்தில் பயணித்தவாறு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

தீவிரவாத சம்பவங்களுக்குப் பெயர்போன காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டு சுதந்திர தினம் பொதுமக்களின் பங்கேற்புடன் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.