நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு…!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவிகளுக்காக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், 65 ஆயிரத்திற்கும் மேலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் , குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும், பணிக்கொடையாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு சார்பில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து  சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.