நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படதிற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே தயாரிப்பாளர் தாணு ஜனவரி 15 அன்று அட்லி இயக்கத்தில் விஜய் சமந்த ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ படம் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவித்தார். ஆனால் புதிதாக பொங்கலுக்கு ரிலீசாகும் படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ‘தெறி’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் தெறி படம் புதிய ரீ-ரிலீஸ் தேதியாக ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு படத்தின் டிரெய்லர் வெளியாகியானது.
இதற்கிடையில் இயக்குநர் மோகன் ஜி எக்ஸ் பக்கத்தில், “திரௌபதி – 2 ஜன. 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்றே தெறி திரைப்படம் மறுவெளியீடாகிறது. தாணு சார், எங்கள் திரைப்படத்திற்கு பெரிய திரைகள் கிடைக்க வேண்டுமென்றால் தெறி வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும். இது எங்கள் கோரிக்கை” எனப் பதிவிட்டார்
மோகன் ஜியின் கோரிக்கையை ஏற்று தயாரிப்பாளர் தாணு ’தெறி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸை மீண்டும் ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ”திரௌபதி 2 மற்றும் Hotspot 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் “தெறி” திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை நேரில் சந்தித்து, அவரது ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.







