அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான மற்றும்…

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான
மற்றும் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகி வந்தது. இதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இருப்பினும், குளிர்காலம் ஆரம்பித்தவுடன் காற்றின் வேகம் மிகவும் குறைவாக உள்ளதால், காற்றின் தரத்தில் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பகுப்பாய்வு கூட்டத்தில், டெல்லியில் காற்றின் தரமானது வரும் நாட்களில் மேலும் மோசமடையும் எனவும், குறிப்பாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசின் காற்று தரக்குழு, டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், GRAP எனப்படும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் 3வது நிலையை முழுமையாக அமல்படுத்த டெல்லி அரசுக்கு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிக்குள் அவசியமற்ற கட்டுமானங்களை மேற்கொள்ளவும், கட்டுமான இடிப்பு, டிரில்லிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.