இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி வளாகத்தில் புதிய அரங்கை குத்துவிளக்கு ஏற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “இன்று பலர் பாரதத்தை பற்றி பேசுவது கிடையாது. பாரத் என்பதை உடைப்பதற்கு, அழிப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலர் இன்றளவும் காலனி ஆதிக்க மனப்பான்மை கொண்டு, தாழ்வு மனநிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுள் பலர், ஆங்கிலேயர்கள் ஆட்சியை கெடுதலிலும் நன்மை என்று நினைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் இங்குள்ள மக்கள் மத்தியில் விதைத்துச் சென்ற எண்ணங்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் இருக்கும் என்று காந்தி ஒருமுறை கூறினார். ஆங்கிலேயர்கள் இந்த மண்ணை ஆட்சி செய்திருக்காவிடில், இந்தியாவிலும் தமிழகத்திலும் பலர் கல்வி கற்றிருக்க முடியாது என்று ஒருவர் பேசியதை செய்தித்தாளில் படித்தேன். இவ்வாறு பேசுபவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
தமிழகத்தில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரம்மிக்க வைக்கிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் பாரதம் உருவாக்கப்பட்டது. ’செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள், வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் நிறைந்த தமிழ்நாடு’ என்று அன்றே மகாகவி பாரதியார் குறிப்பிட்டார். ஒரே பாரதம் தான். அதில் நாம் எல்லோரும் அங்கம். ஒரே பாரதம் என்பதை பலர் சிதைக்க முயற்சிக்கின்றனர்” என்று பேசினார்.