தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப்-4 தேர்வு அறிவிப்பில், மிகக் குறைந்த அளவிலான பணியிடங்களே சேர்க்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான அரசுப் பணி தேர்வர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயல் தலைவர் அச.உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டர், வரி வசூலிப்போர், தட்டச்சர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான 46 வகையான பணிகளுக்காக, குரூப்-4 போட்டித் தேர்வின் மூலம் வெறும் 6,574 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குரூப்-4 பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படும் சூழலில், நடப்பாண்டில் (2026) இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்ப அரசு முன்வந்திருப்பது, இரவு பகலாக படித்து அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையில் கல்லைத் தூக்கிப் போடும் செயலாகும்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்தமாக 6 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு ஊழியர் சங்க அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இத்தகைய சூழலில், அரசு வெளியிட்டுள்ள இந்த குறைந்தபட்ச அறிவிப்பானது “யானைப் பசிக்கு சோளப் பொரி” போட்ட கதையாகவே அமைந்துள்ளது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படாததால், தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கான அரசுச் சேவைகளும் காலதாமதமாகும் நிலை உருவாகிறது.
எனவே, அரசுப் பணி தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் குரூப்-4 பிரிவில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களில் 10 முதல் 15 சதவீதம் வரையிலான இடங்களையாவது உடனடியாக நிரப்பக்கூடிய வகையில், அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




