திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2023-24-ம் ஆண்டிற்கான ரூ4,400 கோடி மதிப்பீட்டில் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த மாதம் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் இதனை வெளியிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், 2022-23 நிதி ஆண்டில் திருப்பதி தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,385
கோடியே 25 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் 2023- 24 நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் வருமானம் ரூ.4,411 கோடியே 65 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,591 கோடியும், பல்வேறு வங்கிகளில் தேவஸ்தானம் வைப்பு நிதியாக வைத்திருக்கும் பணத்திற்கு கிடைக்கும் வட்டியாக ரூ.990 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ.500 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தரிசன டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.330 கோடியும், கட்டண சேவை
டிக்கெட் விற்பனை மூலம் ரூ.140 கோடி ரூபாயும், அறைகள் மற்றும் கல்யாண
மண்டபங்களின் வாடகை வருவாய் மூலம் ரூ.129 கோடி ரூபாயும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல், ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.1,532 கோடி ரூபாயும், பொருட்களைக் கொள்முதல் செய்யும் வகையில் ரூ.690 கோடி ரூபாயும், முதலீட்டுச் செலவுகள் வகையில் ரூ.600 கோடியும், அபிவிருத்தி பணிகளுக்காக ரூ.300 கோடியும் முக்கிய செலவினங்களாக இருக்கும் என்று தேவஸ்தான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.