ஹீரோவுக்காக கதை பண்ணாமல், கதைக்கு ஏற்ப ஹீரோவை போட்டு படத்தை எடுங்கள் என்று தயாரிப்பாளர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர். கண்ணன் என்பவர் இயக்கி தயாரித்து இருக்கும் படம் தான் ‘காசேதான் கடவுளடா’. ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இப்படமானது மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.. படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சி, அதாவது செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆர் கண்ணன், நடிகர் சிவா, தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மேடையில் பேசிய கே ராஜன், இன்றைக்கு மக்களின் மனம் எப்படி இருக்கும் என்று புரியவே இல்லை. எந்த படத்தை ஏற்று கொள்வார்கள் எந்த படத்தை ஒதுக்கி தள்ளுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் நல்ல படத்தை ஏற்று கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம் தான் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே. லவ் டுடே படத்தை மாணவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் ஏற்று கொண்டார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பல பேர் ஆடியோ நிகழ்ச்சி வந்தால் மரியாதை குறைந்து விடும் என நினைக்கின்றனர். தயாரிப்பாளரை மதிக்க தெரிய வேண்டும். இயக்குனரை வணங்க தெரிய வேண்டும். எல்லாமே இயக்குனர் தான். இயக்குநர் இல்லாமல் யாரும் இல்லை. அதேபோல் முதலில் ஒரு படத்திற்கு கதை தான் முக்கியம், பிறகு தான் ஹீரோ. நாயை போட்டு கூட படத்தை ஓட்டி விடலாம். அதற்கு உதாரணம் ராமநாராயணன் எடுத்த படங்கள். அவர் 28 நாளில் எடுத்து 100 நாட்கள் ஓடிய படம் மட்டுமே 78.
அப்படி இருக்கும் போது இன்னும் மூன்று வருடத்திற்கு இயக்குனர் ஆர்.கண்ணன் படங்களுக்கான கதைக்களத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான். அதனால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் தலைப்பைப் போல படம் வெற்றியடைந்து பணம் கொட்ட வாழ்த்துகள்” என்று படக்குழுவினருக்கு, வாழ்த்து தெரிவித்த அதே வேளையில், மறைமுகமாக இயக்குநர் அட்லீ குறித்தும் விமர்சிக்க தவறவில்லை.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வெளிவந்த படம்தான் சக் தே இந்தியா திரைப்படம். ஹாக்கியை மையமாக வைத்து உருவான கதை. இந்த கதையை மையமாக வைத்துதான் பிகில் என்கிற பெயரில் அட்லீ படம் எடுத்துள்ளார். அதுல ஹாக்கி, இதுல கால்பந்து அவ்வளவுதான் வித்யாசம். தயாரிப்பாளரை எட்டி எட்டி உதைத்துவிட்டார். ஏஜிஎஸ் பெரிய கம்பெனி என்பதால் அப்படத்தை சமாளித்தார்கள். 5 ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை நடிக்க வைத்துவிட்டு அதுல 10 சதவீதம் கமிஷன் வாங்கி உள்ளார் இயக்குனர்.
தயாரிப்பாளர்களிடம் 30 கோடி, 40 கோடினு சம்பளம் வாங்கிட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் சம்பளத்தில் 10 சதவீதம் கமிஷன் வேற வாங்குறது. இப்படி நியாயமே இல்லாமல் சம்பாதிக்கும் பணமெல்லாம் நிக்குமா என்று கடுமையான விமர்சனங்களையும் கே ராஜன் முன்வைத்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா