பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாட்டில் தனிநபா் வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளது.
பாஜக பொறுப்பேற்ற 2014-15-ஆம் நிதி ஆண்டில் நாட்டில் தனிநபா் வருமானம் ரூ. 86,647-ஆக இருந்தது. இந்த வருமானம் 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ. 1,72,000 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபா் வருமானம் கடந்த 8 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இது சுமாா் 99 சதவீதம் அதிகரிப்பாகும். கொரோனா காரணமாக 2020-21-ஆம் நிதியாண்டில் தனிநபா் வருமானம் குறைந்ததாக என்எஸ்ஓ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் தனிநபா் வருமானம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜெயதி கோஷ் கூறுகையில், ‘‘பணவீக்கத்தைக் கணக்கில் எடுக்காமல் தனிநபா் வருமானத்தை ஆராய்ந்து பார்த்தால், அது மிகக் குறைவான அளவில்தான் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நீட் தேர்வு – இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாட்டு மக்கள்தொகையில் உள்ள முதல் 10 சதவீத பணக்காரா்களின் வருமானம் மட்டுமே அதிக அளவில் அதிகரித்துள்ளது. நடுத்தரப் பிரிவினரின் வருமானம் தொடா்ந்து குறைந்து வருகிறது. மக்களிடையே சரிசமமற்ற வருமானப் பகிா்வு தொடா்ந்து வருகிறது’’ என்றாா்.
தொழிலக வளா்ச்சிக்கான ஆய்வு மைய இயக்குநா் நாகேஷ் குமாா் பேசுகையில், ‘‘தனிநபா் வருமானம் என்பது இந்தியா்களின் சராசரி வருமானம். அது உயா்ந்தாலும், மக்களிடையேயுள்ள வருமான வேறுபாடு மாறவில்லை. பணக்காரா்களின் சொத்துமதிப்பே தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கீழ்மட்டத்தில் உள்ள ஏழைகளின் வருமானம் அதேநிலையிலேயே உள்ளது’’ என்றாா்.








