குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!

சென்னை பழவந்தாங்கல் திருவிழாவில் சுவாமி நீராட்டு விழாவின் போது குளத்தில் இறங்கிய 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தர்மரலிங்கேஸ்வரர் கோயிலில்…

சென்னை பழவந்தாங்கல் திருவிழாவில் சுவாமி நீராட்டு விழாவின் போது குளத்தில் இறங்கிய 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தர்மரலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டாம் ஆண்டு தீர்த்தவாரி திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கோயிலில் இருந்து தர்மராஜா சுவாமியை 20 அர்ச்சகர்கள் பல்லாக்கில் தூக்கி கொண்டு ஊர்வலமாக தீர்த்தவாரிக்காக சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கோயில்குளத்தில் பல்லாக்குடன் குளத்தில் அனைவரும் மூழ்கி எழுந்துள்ளனர். அப்போது அதில் ஐந்து பேர் கால் வழுக்கி 20 அடி பள்ளம் உள்ள குளத்தில் விழுந்தனர். நிலை தடுமாறி விழுந்த அவர்கள் நீருக்குள் மூழ்கினர். வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் மற்றும் பக்தர்கள், உடனடியாக தண்ணீரில் இறங்கி தேடியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்காததால் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெறிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் மூழ்கிய ஐந்து பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஐந்து பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய பழவந்தாங்கல் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (24), மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராகவ் (22), நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராகவன் (18), கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (23), நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த வணேஷ்( 20) என தெரியவந்துள்ளது. இவர்களில் 3 பேர் ஆடிட்டருக்கான சிஏ படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் திருவிழாவில் அர்ச்சகர்களுக்கு துணையாக அவர்கள் சென்ற நிலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  • பி.ஜேமஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.