சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!

சென்னை மாநகராட்சி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நிதியிலிருந்து கடந்த 12 கல்வி ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –…

சென்னை மாநகராட்சி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் நிதியிலிருந்து கடந்த 12 கல்வி ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது சென்னை மாநகராட்சி.

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவ-மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற 285 மாணவ-மாணவிகள் ஊக்கத் தொகை பெறுகின்றனர்.

சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து ஊக்கத்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 425 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் 90.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 12 கல்வி ஆண்டுகளாக 7254 மாணவர்களுக்கு 16.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் 27,380 புதிய சேர்க்கை நடந்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் 27,380 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று துணை மேயர் மகேஷ் குமார் தெரிவத்தார்.

அமைச்சர் சேகர் பாபு மேடையில் பேசுகையில், “வாழ்க்கை நமக்கு வாய்ப்பை மட்டும் தான் தருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் காலம் தான் மாணவ பருவ காலம். வன யானையைப் போல் வாழ்க்கையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய மாநிலங்களில் எப்படி முதன்மையான முதல்வர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளது போல் தமிழக மாணவர்கள் பெயர் எடுக்க வேண்டும்” என்றார்.

விழாவில் பேசிய சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி பள்ளியின் தேர்ச்சி விகித குறைவை சுட்டிக்காட்டினார்.

கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை கணக்கில் எடுத்து கொள்ள முடியா விட்டாலும் மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்தி காட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு மேடையிலேயே அறிவுரை வழங்கினார் அமைச்சர் சுப்பிரமணியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.