முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை வைகையாற்றில் அடுத்தடுத்து அதிகரிக்கும் உயிரிழப்புகள் 

மதுரை வைகையாற்றில் கடந்த 10 நாட்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 7 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மதுரை வைகையாற்றில் நீரின் வேகமானது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை
வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கைகளை மீறி பொதுமக்கள் குளிக்க செல்வதால் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கடந்த 9 ஆம் தேதி சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் குளித்த திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் (வயது 25), அன்பரசன் (வயது 24) ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இருவரின் உடலை எடுக்கும்போது அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் உடலும் மீட்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று மாலை துவரிமான் முத்தையா சுவாமி கோவிலுக்கு உறவினர்களுடன் வந்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த தனசேகரன் (23), திருமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (20) ஆகிய இருவரும் துவரிமான்-பரவை வைகை ஆற்று பாலத்தின் கீழே குளித்துகொண்டிருந்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனிடையே இருவரின் உடலை தேடும் பணியில் 2ஆவது நாளாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று காலை மதுரை வண்டியூர் அருகே தேனூர் மண்டபத்தின் அருகிலும், செல்லூர் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதியிலும் மிதந்து கொண்டிருந்த அடையாளம்
தெரியாத இருவரின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதேபோன்று கடந்த வாரம் வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மதுரை வைகை ஆற்றில் கடந்த 10 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 9 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 7 பேருடைய சடலங்களில் 5 பேர் உடல் அடையாளம் தெரியாத நிலையில்
மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன இருவரின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடிவருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வைகை ஆற்று கரையோரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram