பரந்தூர் விமானம் நிலையம்; கிராம மக்கள் எதிர்ப்பு

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், புதிதாக விமான…

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், புதிதாக விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் 4,791 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. புதிய விமான நிலையத்திற்கு தற்போதைய விமான நிலையத்திலிருந்து பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். மொத்த நிலத்தில் 50 சதவீத இடம் மாநில அரசினுடையது, மீதமுள்ள 50 சதவீத இடத்தை கையகப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்த விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்ப்புக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற இருந்தது.

விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவித்து கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் அனைத்து கிராம முக்கியஸ்தர்கள் மக்கள் கூட்டரங்கில் அமர வைக்கப்பட்டு பின்னர் தனித்தனியாக கிராம முக்கியஸ்தர்களை இந்த கூட்டரங்கு அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் சந்தித்து கருத்து கேட்பதாக வந்த தகவலை அடுத்து, எங்கள் அனைவரையும் ஒன்றாக வைத்து கருத்து கேட்க வேண்டும் என கூட்டம் நடைபெறும் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

நாங்கள் பத்து மணி முதல் கூட்டம் நடைபெறும் என காத்திருக்கிறோம். இதுவரை கூட்டம் தொடங்கவில்லை. மேலும் கூட்டத்தை நடத்த யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை .
எனவே நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என கூறி கிராம மக்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

கிராம முக்கியஸ்தர்களை வருவாய்த்துறையினர் சமரசம் செய்தும் பயனில்லை. அழிக்காதே அழிக்காதே கிராமத்தை அழிக்காதே என்று அப்பகுதியினர் கோஷமிட்டனர்.
எனினும், தற்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ,சிறு-குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தனர். இதனால், இன்னும் சிறிது நேரத்தில் கூட்டம் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.