சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவையில் இன்று உரையாற்றிய சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், “சமூகநீதிக்கென ஒரு அமைச்சகம் இயங்குவது மகிழ்ச்சியளித்தாலும் அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனையளிக்கிறது. 2021-22 நிதியாண்டில் central sector scheme என்ற முக்கிய திட்டங்களுக்கு ரூ.1, 395 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. நடப்பு நிதியாண்டில் அது 969.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மற்ற துறைகளை விட இந்த துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் எனவும், ஏனெனில் விளிம்பு நிலையில் உள்ள சமூக மக்களை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகிய தளங்களில் மேம்படுத்துவதே இந்த துறையின் நோக்கம் என்றும் கூறிய திருமாவளவன், இந்த சமூகங்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு நினைத்திருந்தால் நிதியை குறைத்திருக்காது. ரூ.400 கோடி அளவுக்கு நிதியை குறைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்கும், ஊக்கப்படுத்தும் நோக்கிலும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இதுவரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அதனை மீண்டும் செயல்படுத்துவதுடன், கூடுதல் நிதியும் அளிக்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார். மேலும், அம்பேத்கரின் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.








