இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் பெருகிவருகின்றன, மத்திய அரசு இயற்கை மருத்துவத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை, உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அலோபதி மற்றும் இந்திய மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில் இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என சுட்டிக்காட்டிய திருமாவளவன், இதனால் இயற்கை மருத்துவம் படிக்கத் தயங்குகின்றனர். அதற்காக அதிக கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், அரசியல் சக்தியாக விசிகவை பொதுமக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை விசிகவின் வெற்றி நிருபித்துள்ளது என்று கூறிய திருமாவளவன், “மதம் என்பதும் ஆன்மீகம் என்பதும் வேறு வேறு. மதம் நிறுவனம், ஆன்மீகம் என்பது உணர்வு. உலகளாவிய மதமாக கிறிஸ்துவம், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது. இந்து மதம் உலக மதமாக மாறவில்லை ஏன் என இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.
அரசியல், மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை என்ற அவர், 2024ல் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க அனைவரும் ஒண்றினைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.







