உத்தர பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு போலி மருத்துவர் ஷேவிங் பிளேடு மூலம் நடத்திய அறுவை சிகிக்கையால், அப்பெண் மற்றும் அவருக்கு பிறந்த பச்சிளங்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அந்த பெண்ணுக்கு ராஜேந்திரா சுக்லா (30) என்பவர் பிரசவம் பார்த்துள்ளார். அந்த நபர் ஷேவிங் பிளேடு மூலம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
இதில், குழந்தையும் பிறந்திருக்கிறது. ஆனால் சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாயும், பச்சிளங்குழந்தையும் உயிரிழந்தனர். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் சம்பவம் இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் சத்தூர்வேதி தலைமையிலான காவல்துறையினர், மருத்துவமனையில் அந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர், போலி மருத்துவர் என்றும் அவர் எட்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதையடுத்து ராஜேந்திரா சுக்லா உட்பட அங்கீகாரம் பெறாமல் அந்த மருவத்துவமனையை நடத்தி வந்த ராஜேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாயும் குழந்தையும் இறந்த சம்பவம் சுல்தான்பூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.







