திருப்பூரில் ஒன்றரை வயதில் ஓட்டநாயகனாக மாறி உலக சாதனை படைத்த சிறுவன்!

திருப்பூர் மாவட்டம்  வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மிவான் தனது ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறி  உலக சாதனை புரிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது…

திருப்பூர் மாவட்டம்  வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மிவான் தனது ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறி  உலக சாதனை புரிந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் சதீஷ்.  இவர் தனது மனைவி அக்ஷ்தா மற்றும் தனது மகன் மிவானுடன் வசித்து வருகிறார்.

இவரது மகன் மிவான் பிறந்து 11 மாதத்திலேயே மிவான் நடக்க ஆரம்பித்துள்ளார். சதீஷ் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது மிவானையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.  இந்நிலையில் மிவானின் நடக்கும் ஸ்டைலை கண்டு ஆச்சரியப்பட்ட அவரது பெற்றோர் இது குறித்து உடற்பயிற்சி வல்லுனர்களிடம் கேட்டுள்ளனர்.

மிவானுக்கு இயல்பாகவே விளையாட்டு வீரர்களுக்கு உண்டான திறன் உள்ளதாகவும் நல்ல பயிற்சியாளரை வைத்து பயிற்சி அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.  மிவானின் திறமையை ஊக்கப்படுத்த நினைத்த அவரது பெற்றோர் மிவானுக்கு தொடர்ச்சியாக ஓட பயிற்சி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற உலக சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.  முதலில் 25 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி சென்று கடக்க பயிற்சி அளித்துள்ளனர்.  பின்னர் ஒன்றரை வயதில் சிறுவன் மிவான் 50 மீட்டர் தூரத்தை 24 விநாடிகளில் ஓடிச் சென்று கடக்கும் வீடியோவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிகழ்வை உலக சாதனை ஆக அங்கீகரித்து சிறுவன் மிவானுக்கு உலக சாதனை
படைத்தமைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை “கலாம் புக் ஆப் வேர்ல்ட்
ரெக்கார்ட்ஸ்” நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் தன் மகனின் திறமை என்ன என்பதை
நாங்கள் கண்டுபிடித்தோம்.  அவரை மேலும் ஊக்குவித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த உலக சாதனை நிகழ்விற்கு
விண்ணப்பித்திருந்தோம்.  ஒன்றரை வயதில் தனது மகனின் திறமைக்கு உலக சாதனை
அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் மேலும் சிறுவன்
மிவானுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்க உள்ளதாகவும் அவரை தொடர்ச்சியாக
ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் மிவானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.