மாணவி உயிரிழப்பு விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கரூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், புகாரை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு…

கரூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், புகாரை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக்  கொண்டார். மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வராததைடுத்து, பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவர், வீட்டுக்குச் சென்று பார்த்தார். மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுமியின் அம்மாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,உயிரிழப்புகான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், ’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு சொல்ல பயமா இருக்கு, இந்தப் பூமியில் வாழறத்துக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை, ஆனா முடியாதில்ல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க’ என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மாணவி உயிரிழப்பு  விவகாரத்தில், பள்ளியின் மீது சந்தேகம் இருப்பதாக மாணவியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். மாணவியின் வேதியியல் புத்தகம் கிழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆசிரியர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பான புகாரை, முறையாக விசாரிக்கவில்லை என வெங்கமேடு காவல்நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் மீது புகார்கள் எழுந்தன. புகார் அளிக்கச் சென்ற மாணவியின் உறவினர்களை தரக்குறைவாக பேசி, தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.