திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது, பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், அடிமாலி பகுதியைச் சேர்ந்த ஷீபா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞருடன் சமூக வலைத்தளம் மூலம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ஷீபாவை, அருண் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில், ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், திருமணத்தை மறைத்து தம்முடன் பழகி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஷீபாவிடம் பேசுவதை அருண் நிறுத்திவிட்டார். இந்நிலையில், திருமணம் குறித்து பேச வேண்டும் என அருணை, அடிமாலி பகுதிக்கு ஷீபா வரவழைத்துள்ளார். அங்கு சென்ற அருணை, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஷீபா வற்புறுத்திய தாகத் தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை, அருண் முகத்தில் வீசினார். இதில், படுகாயமடைந்த அருணை பொதுமக்கள் மீட்டு, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். ஆசிட் பட்டதால், அருணின் பார்வை பறிபோயுள்ளதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், ஷீபாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








