தாய்லாந்தில் பிரதமரையே பதவியில் இருந்து நீக்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.    தாய்லாந்தின் பிரதமராக பிரயுத் சான் ஓச்சா பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ம்…

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

 

தாய்லாந்தின் பிரதமராக பிரயுத் சான் ஓச்சா பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்த்து பிரயுத் சான் ஓச்சா ஆட்சியைப் பிடித்தார். அதன்பின்னர் 2019-ல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். அந்நாட்டில் பிரதமர் பதவி வகிப்பதற்கான வரம்பு 8 ஆண்டுகள் என்ற நிலையில், அந்த சட்டத்தை பிரயுத் மீறியிருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

ஆகஸ்ட் 24, 2014 அன்று அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக பதவியேற்றதில் இருந்து நேற்றுடன் 8 ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், அவர் சட்டத்தை மீறியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால், 2017-ல் கால வரம்பு விதியைக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, பதவிக் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரயுத் சான் ஓச்சா ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

பதவிக்கால வரம்பை மீறியதாக தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலனைக்கு ஏற்ற அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம், பிரயுத் சான் ஓச்சாவை சஸ்பெண்ட் செய்தது. மேலும், புகாரின் நகலைப் பெற்ற 15 நாட்களுக்குள் பிரயுத் தனது வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. ஆனால் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என கூறவில்லை.

 

பதவிக்கால வரம்பு தொடர்பாக சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வெளியாகும் வரை பிரயுத் பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதுவரை பிரயுத்தின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான பிரவித் வாங்சுவான் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் பிரதமரையே பதவியில் இருந்து தூக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.