கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரப்பானி தலைமையில் துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 2022-23 ஆண்டிற்கான நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வேளாண் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், நெல் கொள்முதல் தொடர்பான கருத்துகளை விவசாயிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை மே மாதம் திறந்த காரணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
“சன்ன” ரக நெல்லை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். மக்கள் அதை தான் அதிக அளவில் பயன்படுத்துகிரார்கள். எனவே “சன்ன” ரக நெல் அதிக அளவில் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளை கட்டி வருகிறோம். நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கொள்முதல் செய்யப்படும்போது தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மூன்று ரூபாய் தொகையானது தற்பொழுது 10 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க முதற்கட்டமாக 3 லட்சம் டன் அளவுக்கு சேமித்து வைக்க சேமி குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது. நெல் சேமிப்பு கிடங்குகளில் மட்டும் அல்லாமல் மற்ற காலியாக உள்ள மத்திய மாநில அரசு அலுவலக கட்டிடங்களில் மற்றும் கிடங்குகளில் நெல்லை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தனியார் அரவை ஆலைகளில் நிறப்ரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கருப்பு, பழுப்பு நிற அரிசிகள் கண்டறியப்பட்டு தரமான அரிசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாட்டில் புதிதாக 13 நெல் அரவை ஆலைகள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதியை நெல்கொள்முதல் செய்யவுள்ளோம். அடுத்த ஆண்டு 5 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக குருவை சாகுபடி செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு 43 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களை விட, டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். வியாபாரிகள் ஏங்கேயும் பயன் அடைய கூடாது. விவசாயிகள் தான் பயன் அடைய வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.







