இலவசங்கள்: கவர்ச்சித்திட்டங்களா?…வளர்ச்சித்திட்டங்களா?…வலுக்கும் விவாதம்…

தேர்தலில் எந்த ஒரு பரபரப்பான அரசியல் அதிரடிகள் நிகழ்ந்தாலும் அதனையும் தாண்டி மக்களை ஆக்ரமித்து பேசு பொருளாக மூலை முடுக்கெல்லாம் வியாபிக்கும் விஷயம் ஒன்று உண்டென்றால், அது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும்…

தேர்தலில் எந்த ஒரு பரபரப்பான அரசியல் அதிரடிகள் நிகழ்ந்தாலும் அதனையும் தாண்டி மக்களை ஆக்ரமித்து பேசு பொருளாக மூலை முடுக்கெல்லாம் வியாபிக்கும் விஷயம் ஒன்று உண்டென்றால், அது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள்தான். அடுத்து அமையப்போகும் ஆட்சியை  தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த இலவசங்கள்  குறித்த அறிவிப்புகள்,  தேர்தலின் கதாநாயகன், கதாநாயகி என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்றன.

ஆனால் இவ்வாறு தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது தொடர்ந்து நீடிக்குமா? அல்லது நிறுத்தப்படுமா?…இலவசங்கள் வளர்ச்சி திட்டங்களா?…கவர்ச்சித் திட்டங்களா?  இலவச திட்டம் எது?…வளர்ச்சித்திட்டம் எது?….இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க என்ன வரையறை உள்ளது?….என சமீபகாலமாக விவாதங்கள் பரபரக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் 10ந்தேதி ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் நடைபெற்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2ஜி எத்தனால் ஆலை திறப்பு விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி. இலவச திட்டங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தொடுத்தார். இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கும் ஆபத்தானது எனக் கூறிய மோடி, இந்த திட்டங்கள் நாடு தற்சார்பு அடைவதை தடுக்கும் என்றார். நேர்மையாக வரிச்செலுத்துவோர் மீது மேலும் சுமையைத்தான் இந்த திட்டங்கள் அதிகரிக்கச் செய்யும் என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

பிரதமர் மோடியின் இந்த விமர்சனங்களுக்கு எதிராக கொந்தளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வரிசெலுத்துவோர், அந்த பணம் குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கான கடன் தள்ளுபடிகளாக மாற்றப்படும்போதுதான் ஏமாற்றப்படுவார்கள் என்று கூறினார். தங்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதால் வரிசெலுத்துவோர் ஏமாற்றம் அடையமாட்டார்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலவச திட்டங்கள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஆக்ரோஷமாக தனது வாதத்தை முன்வைத்தார். மாநில அரசுகளின் கொள்கைகளை மாற்றச்சொல்ல நீங்கள் யார்?…எந்த பொருளாதார நிபுணத்துவத்தின் அடிப்படையில் இதனை கூறுகிறீர்கள்…நீங்கள் என்ன பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுவிட்டா இலவ திட்டங்கள் கூடாது என தெரிவிக்கிறீர்கள்? என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்காக எழுப்பிய கேள்விகள் சமூக வலை தலங்களில் வைரலானது.

இதற்கிடையே இலவச திட்டங்கள் முக்கிய பிரச்சனை என்றும் இது சரியா, தவறா என விவாதிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. தேர்தலின்போது இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய உத்தரவிடக்கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா தொடர்ந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, இலவச திட்டங்கள் சரியா, தவறா என்பது குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்கலாம் என கருத்து தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி மத்திய அரசு ஏன் விவாதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் மூலம் தனது கருத்தை உச்சநீதிமன்றத்தில் திமுக எடுத்துரைத்தது. தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட இலவச திட்டங்கள் சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தவும் உதவியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் திமுக எடுத்துரைத்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு வகிப்பது, தனிநபர் வருமானம் போன்றவற்றில் தமிழ்நாடு பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பதற்கு இந்த இலவச திட்டங்களும் காரணம் என உச்சநீதிமன்றத்தில் திமுக தனது வாதத்தை முன் வைத்தது.

தமிழக அரசியலில் இலவசங்கள் என்பது 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1920ம் ஆண்டு நீதிக்கட்சி சென்னை மாநகர கவுன்சிலுக்கு உட்பட்ட பள்ளிகளில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் நிதி சிக்கல் போன்ற காரணங்களினால் அதனைத் தொடர முடியவில்லை. இதையடுத்து 1956ல் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தையே பின்னர் சத்துணவு திட்டமாக மாற்றினார் எம்ஜிஆர். இதே திட்டத்தில் முட்டையை சேர்த்தார் கருணாநிதி. அதை தினமும் ஒரு முட்டை என மாற்றினார் ஜெயலலிதா.  இவையெல்லாம் அரசு பள்ளிகளுக்கு ஏழை மாணவர்கள் வருவதை  உறுதி செய்தன. கல்வித் தரத்தில் தமிழகம் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோட இவையெல்லாம் உதவின.

இப்படி இலவச அரிசி தொடங்கி இலவச கலர் டிவி, இலவச லேப்டாப், இலவச எரிவாயு அடுப்பு, மிக்ஸி கிரைண்டர், தங்கத் தாலி, பெண்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம் என அடுக்கு அடுக்காக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை எல்லாம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தன, சமூக நிலையில் ஏற்றத்ததாழ்வினை ஓரளவற்காவது களைவதற்கு இவை வழி வகுத்தன,
வட இந்திய மாநிலங்களை தமிழ்நாட்டுடன் சற்று ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை தெரிந்துவிடும் என்று இலவச திட்டங்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த திட்டங்களால் தமிழ்நாட்டின் கடன் சுமை பெருமளவு அதிகரித்துவிட்டதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

இலவசங்கள், தேர்தல் அறிக்கைகள் என்ற உடன் பளிச்சென 2006ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நினைவுக்கு வந்துவிடும்.  அந்த தேர்தலின்போது தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்து வாக்குறுதிகளை திமுக, அதிமுக கட்சிகள் பெரியளவில் அறிவித்தன. திமுக சார்பில் இலவச கலர் டிவி, 2 ஏக்கர் இலவச நிலம், என பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலில் கதாநாயகன் என அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பாராட்டினார். அந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு இலவச கலர் டிவி வழங்குவோம் என்கிற வாக்குறுதி முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது. அதிமுக சார்பில் 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மாணவர்களுக்கு லேப்டாப் உட்பட பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . இதே ட்ரெண்ட் 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழகத்தில் தொடர்ந்தது. ”கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருந்தது, இந்த தேர்தலில் கதாநாயகியாக போற்றப்படும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்” என அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறினார். ஆனால் திமுகவைவிட ஒருபடி மேல்போய் இலவச அறிவிப்பைகளை 2011ல் வெளியிட்டது அதிமுக. இலவச மிக்ஸி, ஃபேனுடன் கிரைண்டரையும் இலவசமாக வழங்குவோம் என்கிற அறிவிப்பு வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது.

2016ம் ஆண்டு இந்த டிரண்ட் சற்று மாறத் தொடங்கியது. இலவசங்களின் அளவு குறைந்தது. மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி, லோப்டாப் உள்ளிட்ட வாக்குறுதிகள் தவிர பொதுமக்களுக்கான கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகள் அதிகம் இடம்பெறவில்லை. 2006ல் இலவச கலர் டி.வி, 2011ல்  இலவச கிரைண்டர்,மிக்ஸி, பேன் என்பதைபோல் 2016ல் இலவச அறிவிப்புகள் பேசு பொருள் ஆகவில்லை.

தேர்தலில் கவர்ச்சிகரமான இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது திமுக அதிமுக மீது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இரு திராவிடக்கட்சிகளும், இது கவர்ச்சி திட்டம் அல்ல, வளர்ச்சித்திட்டம் என்பது போல் அறிவிப்புகளை வெளியிட்டன. பொருட்களாக இலவசங்களை அறிவிக்காமல், வேறுவடிவத்தில் இலவசங்களை அறிவித்தன. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டது திமுக. மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நகரப்பேருந்துகளில் இலவச பயணம், என்றும் வாக்குறுதிகளை அளித்தது திமுக.

அதேநேரம் அதிமுக,  வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, அனைவருக்கும் வீடு, வருடத்திற்கு 6 இலவச எரிவாயு சிலண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை பட்டியலிட்டது. ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கைகளே மக்களை அதிகம் கவர்ந்தது என உணர்த்துவதுபோல் அக்கட்சி தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் தமிழ்நாட்டிலேயே கடந்த 15 ஆண்டுகளில் காலத்திற்கு ஏற்ப மாறியுள்ளன. இந்நிலையில் இந்த இலவச அறிவிப்புகளின் அடுத்தக்கட்டம் என்னவாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதை நோக்கிய முக்கியமான விவாதம் நாட்டில் சூடுபிடித்துள்ளது.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.