இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒரு பக்கவாத மரணம் ஏற்படுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் தெரிவித்தார்.
டெல்லி எய்ம்ஸ் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.வி.பத்மா ஸ்ரீவஸ்தவா, கூறுகையில், “இந்தியாவில் அதிக இறப்புகளுக்கு காரணமான நோய்களில் பக்கவாதம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,85,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 40 விநாடிகளுக்கு ஒரு பக்கவாத பாதிப்பும் மற்றும் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பக்கவாதம் இறப்பும் நிகழ்கிறது.
குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸின் புள்ளி விவரத்தின்படி, பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரில் 70.9% பேர் உயிரிழப்பதாகவும், 77.7% பேர் உடல் உறுப்புகள் இயலாமை நிலையை அடைவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், பக்கவாதத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகவும் எய்ம்ஸ் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.வி.பத்மா ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். நாட்டில் 20 வயதுக்குட்பட்ட சுமார் 52 லட்சம் சிறார்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
“இந்த ஆபத்தான புள்ளிவிவரங்கள் இருந்த போதிலும், பல இந்திய மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு விரைவாகவும் திறமையாகவும் சிகிச்சை அளிக்க தேவையான உள்கட்டமைப்பு இல்லை. நாடு முழுவதும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பக்கவாத சிகிச்சை பிரிவு திறம்பட செயல்படவில்லை என்றும் தெரிவிக்கிறார் டாக்டர் பத்மா.








