வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காஞ்சிபுரத்தில் அஜித்குமாரின் துணிவு பட கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் அடுத்த நெமிலி பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர், முதுகில் அலகு குத்திக் கொண்டு கிரேன் மூலம் மேலே சென்று 30 அடி உயரமுள்ள அஜித்குமார் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விருதுநகரில் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்துக்காக, அரசியல் நோக்கத்துடன் வால் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், நடிகர் விஜய் தலைமைச் செயலகத்தில் அமர்ந்திருப்பது போலவும், துணிவுக்கு பின்னாடி ஆளுங்கட்சி, எங்கள் தளபதி பின்னாடி மக்கள் கட்சி என்று வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், வடசென்னை, இராயபுரம் பகுதியில் அமைந்துள்ள பாரத் திரையரங்கில் விஜய், அஜித் ரசிகர்கள் மற்றும் தமிழ்நாடு சமையல் கலை சங்கம் சார்பில் கம்பு , தினை, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, சாமை போன்ற 9 வகை தானியங்களால் 15 கிலோ அளவில், ஒருபுறம் விஜய்யின் முகத்தோற்றமும் மறுபுறம் அஜித்தின் முகத்தோற்றமும் கொண்ட ஓவியத்தை வரைந்துள்ளனர்.
வேலூரில் உள்ள ஆஸ்கர் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 70 அடி உயர நடிகர் அஜித்குமாரின் பிரமாண்ட கட்அவுட்டுக்கு மாலை அணிவித்தும், கற்பூர ஆராதனை எடுத்து தேங்காய், பூசணிக்காய் உடைத்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செண்டை மேளம், தாரை தப்பட்டை என திரையரங்க வளாகத்தையே திருவிழாவாக மாற்றினர். இதேபோல் இன்னும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.