சீர்காழியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி
அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி
கோதுமை உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன்
கடையில் பயனாளி ஒருவர் அரிசி வாங்கியுள்ளார். அரிசி முழுவதும் புழுக்கள்
நெளிந்து உள்ளது.
அந்த அரிசி நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் பயனாளிகளுக்கு வழங்கியதும் அதில் புழுக்கள் நிறைந்து இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயனாளி, தான் வாங்கிய புழுக்கள் நிறைந்த அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி
வழங்குவதைக் கண்டித்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கோதுமை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
—ரெ.வீரம்மாதேவி







