பழனி முருகன் கோயிலுக்கு அந்தரத்தில் தொங்கியபடி பறவைக் காவடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இருந்தும் சாதாரண நாட்களிலும் பொதுமக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், உள்ளிட்ட திரை பிரபலங்கள் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று திரைப்பட நடிகர் சந்தானம் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல் மூன்று கீலோ மீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் வால்பாறையில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தும் விதமாக காவடிகளை எடுத்தும், தீர்த்த குடங்கள் எடுத்தும் கிரிவலம் வந்தனர். மேலும் பக்தர்கள் சிலர் உடல் முழுவதும் கத்திகளை குத்திய படியும் , பெண்கள், சிறுமிகள் முகத்தில் பத்து அடி நிமுள்ள அலகு குத்தியும் கிரிவலம் வலம் வந்தனர்.
கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவைக் காவடியில் மலையடிவாரத்திலுள்ள கிரி வீதியில் மேளதாளத்துடன் வலம் வந்து நேத்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
- பி.ஜேம்ஸ் லிசா









