பக்தர்கள் மீட்டெடுத்த நந்தவனம்

கோயிலில் பசுமையை பேணும் வகையில், மூலிகை மற்றும் அரிய வகை மரங்களை பக்தர்களே நட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் நந்தவன பகுதி, இயற்கை கொஞ்சும் சிறிய காடு போல் மாறியுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காட்டில்…

கோயிலில் பசுமையை பேணும் வகையில், மூலிகை மற்றும் அரிய வகை மரங்களை பக்தர்களே நட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் நந்தவன பகுதி, இயற்கை கொஞ்சும் சிறிய காடு போல் மாறியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்ட சத்தியவாகீஸ்வரர்- கோமதி அம்பாள் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த
இந்த கோயிலில் வரலாற்று சிறப்புகளுக்கும், புராண சிறப்புகளுக்கும் பஞ்சமில்லை.
பிரசித்திப் பெற்ற இந்த கோயில் வெளிப்பிரகாரத்தில், முன் காலத்தில் நந்தவனம் ஒன்று
இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த நந்தவனம் அழிந்து விட்டது.

இந்நிலையில், கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் சிலர், பழமையை மீட்டெடுக்கும் வகையில் மீண்டும் நந்தவனத்தை உருவாக்க முடிவு செய்தனர். அதன்படி, களத்தில் இறங்கிய அவர்கள், மரங்களை நட்டு பராமரிக்கத் தொடங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அரிய வகை மரக்கன்றுகள், மூலிகை மரக்கன்றுகள் மற்றும் செடிகளை சேகரித்து வந்து, தனித்தனியாக பாத்தி கட்டி நட்டு வைத்தனர். இவை கடந்த 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்து சிறிய காடு போல் பசுமையாக காட்சியளிக்கிறது.

இங்கு 27 வகையான ராசிக்குரிய மரங்கள், 40 வில்வ மரங்கள், கோயிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரம், புரசை மரம் என 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சுவாமிக்கு சூடுவதற்காக மனோ ரஞ்சிதம் பூ, கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் தன்மையுடைய மந்தாகரப் பூ, முல்லைப் பூ, பாரிஜாதம் உள்ளிட்ட பூச்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. களக்காடு பெயர் வர காரணமான களா மரங்களும் பராமரிக்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க, இவர்கள் செயற்கையான உரங்களை நாடுவதில்லை. மாறாக காய்ந்த இலைகளை மட்டும் இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். பசுமையை பேணி காக்கும் பக்தர்களின் இந்த செயல், பாராட்டுக்குரியதே.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.