ஜூன் மாதத்தில் 4ம் அலை? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள்…

சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 26ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் தொடங்குகின்றது. இந்நிலையில் 50,61,287 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 12-14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி இலக்கான 21,21,000-இல் 10,91,849 பேருக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம் எனக் கூறினார். மேலும் 99% முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு, மாநகராட்சிகளில் முதன்மையானதாக சென்னை மாநகராட்சி உள்ளது என்றும் விரைவில் 100% இலக்கை அடைவதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றின் தீவரம் இன்னும் குறையாததால் ஜூன் திங்களில் நான்காம் அலைக்கு வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதனை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரத் தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தடுப்பூசியில் ஆர்வம் காட்ட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.