முக்கியச் செய்திகள் இந்தியா

வனம், மரங்கள், மூலிகை… பத்மஸ்ரீ விருது பெற்ற ’காட்டின் கலைக்களஞ்சியம்’!

’காட்டின் கலைக்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் துளசி கவுடா பத்மஸ்ரீ விருதுபெற்றதன் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் நேற்றும் இன்றும் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

நேற்று வழங்கப்பட விருது விழாவில் வெறுங்காலுடன் வந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்ற அந்தப் பழங்குடி பெண், யார் என்று கேட்க வைத்திருக்கிறார் அனைவரையும். அவர் துளசி கவுடா! 72 வயதான இவரை ’காட்டின் கலைக்களஞ்சியம்’ என்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான இவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை நடவு செய்திருக்கிறார். வனத்துறையில் தற்காலிக தன்னார்வலராக சேர்ந்த இவர், தனது 12 வயதில் இருந்தே மரம் நடுவதை கடமையாகச் செய்திருக்கிறார். அந்த மரங்கள் வளர தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார்.

அரியவகை தாவரங்களும் மூலிகைகளும் அதன் பலன்களும் துளசி கவுடாவுக்கு அத்துப்படி. காடும் காட்டின் நீள அகலங்களும் அதன் தாவரங்கள் அனைத்தும் துளசிக்கு துல்லியம் என்பதால் அவரைத் தேடி வருகிறார்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். காடு தொடர்பான அவர் அறிவைக் கண்டு வியக்கும் வன ஆர்வலர்கள், ’காடுகளின் கலைக் களஞ்சியம்’ (Encyclopedia of Forest) என்றே அழைக்கிறார்கள், அவரை!

வயது 72 ஆனாலும் இன்னும் மரம் நடுவதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். வனம் தொடர்பான தனது அறிவை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்தும் வருகிறார், துளசி கவுடா. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதை பாராட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

 

Advertisement:
SHARE

Related posts

மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

Sathis Sekar

கொரோனா மரணங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க சோனியா கோரிக்கை

Saravana Kumar

ஃபார்முக்கு திரும்பினார் டேவிட் வார்னர்.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

Halley karthi