விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் மக்னா காட்டுயானை விவசாய தோட்டத்தில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவாரப் பகுதியாகும்.…

மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் காயத்துடன்
சுற்றித்திரியும் மக்னா காட்டுயானை விவசாய தோட்டத்தில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவாரப் பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் விளைநிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த இரண்டு தினங்களாக நடமாடி வருகிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்த நிலையில் வனத்துறையினர் வந்து யானையை விரட்ட முயன்றனர்.

அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் நோய்வாய்ப் பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் யானையை வனத்துறையினர் அடர் வனத்தில் விரட்டியடிக்க பட்டாசுகள் வெடித்து
முயற்சித்தனர்.  இருப்பினும் அந்த யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.

அதே சமயத்தில் அந்த யானை அருகில் உள்ள தக்காளி பயிரிடப்பட்டிருந்த விவசாய
நிலங்களில் புகுந்து அதனை உட்கொன்ட போது யானையால் உட்கொள்ள முடியவில்லை.
இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர் அதையும் யானை உட்கொள்ளவில்லை.

இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர்
முயன்றனர். இதனால் கோபமடைந்த யானை அங்கிருந்து விவசாய தோட்டத்தின் வேலியை மிதித்து சேதப்படுத்தியது.

மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இந் நிலையில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ரெ.வீரம்மாதேவி




சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.