அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.
இந்நிலையில், மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என கடந்த மார்ச் 23 அன்று அறிவிக்கப்பட்டார். இதனால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மார்ச் 24-ம் தேதி, ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இந்த இரண்டு ஆண்டு தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார். செஷன்ஸ் நீதிமன்றம் ஏப்ரல் 20 அன்று ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது. மேலும் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் எம்.பி. மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
தொடர்ந்து ஏப்ரல் 25-ம் தேதி, சூரத் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் பிரசாக் கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
சூரத்தில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது மேலும் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. ஜூலை 4 அன்று வழக்கறிஞர் பிரதீப் மோடி தாக்கல் செய்த மற்றொரு அவதூறு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி அடுத்த விசாரணை வரை ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து ஜூலை 7 அன்று மோடி குடும்பப்பெயர் வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியாக இருப்பதாகவும், அந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும், நீதிபதி தெரிவித்தார். சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் நீதிமன்றம் ஆகியவற்றில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்தப்படியாக கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பு மற்றும் எதிர் தரப்பிற்கு தலா 15 நிமிடங்கள் மட்டுமே வாதங்களை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் வழக்கு சம்பந்தமான விஷயங்களை மட்டுமே வாதங்களாக முன்வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ராகுல் காந்தி தரப்பு:-
ராகுல் காந்தி தனது உரையில் இப்போது குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட அவருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மேலும் 13 கோடி பேர் அளவிற்கு உள்ள இந்த சமூகத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்களாக மட்டுமே உள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அவமரியாதை செய்ய வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி விவகாரத்தில் அத்தகைய காரணம் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை .ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கடத்தல், கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றம் அல்ல. மாறாக ஜாமின் பெறக்கூடிய ஒரு வழக்கு ஆகும். ஆனால் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை கடுமையான குற்றமாக கருதி இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு அவதூறு வழக்கிற்காக நான் 8 ஆண்டுகள் மக்களுக்காக நான் பேசாமல் இருக்க வேண்டுமா? எனக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் கிடையாது. எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அத்தனை வழக்குகளும் பா.ஜ.க.வினரால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிலும் நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை. ஏற்கனவே இரண்டு கூட்டத்தொடர்களை இழந்து விட்டதாகவும் தனது தொகுதி மக்களுக்கான பணிகளை செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளேன்.
புகார் கொடுத்தவர் நேரடியாக எனது பேச்சை கேட்கவில்லை மாறாக வாட்ஸ் அப் செயலியில் யாரோ அனுப்பிய தகவலை அடிப்படையாகக் கொண்டு புகார் கொடுத்து இருக்கிறார். மேலும் யார் அந்த தகவலை அனுப்பினார்கள் என்ற விவரத்தையும் அவர் வழங்கவில்லை எனவே நேரடியாக தனக்குத் தெரியாத ஒரு விவகாரத்தில் தலையிட்டு வழக்கு தாக்கல் செய்து இருக்கிறார் இது அடிப்படையிலேயே தவறான வழக்கு. இந்த வழக்கில் 66 நாட்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மே மாதம் நான் வாதங்களை முடித்த நிலையில் ஜூலையில் தான் தீர்ப்பு வந்தது. தண்டனையை நிறுத்தி வைக்கும் கோரிக்கையை மட்டுமே நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்று உச்சநீதிமன்றம் தற்போது கூறுகிறது. .இது ஒரு முக்கியமான விஷயம், என்னவென்றால் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவால் 8 ஆண்டுகள் மௌனமாக்கப்படுகிறார். வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் என்பதால் வயநாடு தொகுதிக்கான தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி பேசுகையில், ராகுல் காந்தியின் பேச்சை யூடியூப் மூலம் பதிவிறக்கம் செய்து தான் புகாரில் சமர்ப்பிக்கப்பட்டது என்று கூறினார்: அதற்கு பதிலளித்த நீதிபதி அந்த பேச்சில் ஒரு சில பகுதிகள் முழுமையாக இல்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி குறுக்கிட்டு பேசுகையில், குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய பகுதியின் வீடியோ உண்மையானது. முழுமையாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரியும் அதை உறுதி செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பதிவு செய்தவர்கள் தேர்தல் ஆணையத்தில் அதை உறுதி செய்துள்ளனர். கீழமை நீதிமன்றத்திலும் அது உறுதியாகியுள்ளது. ராகுல் காந்தியின் நோக்கம் “மோடி” என்ற சமுதாயத்தை சேர்ந்தவர் பிரதமர் என்பதால் அவர் சார்ந்த சமுதாயத்தை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதுதான் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிகபட்ச தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது, ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானாதா?. இரண்டு ஆண்டு சிறை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல் காந்தி என்ற தனிநபருக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையால் அவர் சார்ந்த தொகுதி பாதிக்கப்படுகிறதே என்று விமர்சித்து ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா












