’DMK FILES’ எனும் திமுக கோப்புகள் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
சொத்துப் பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும். ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன் அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி சூளுரை
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தொடர்பாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கோப்புகள் (DMK Files) குறித்த விவரங்கள் நாளை காலை 10.15 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1646364453091569671?t=nuVA6upwpH7GWRLQNdbuFA&s=08
அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட முதலமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








