தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல், தமிழ்நாடு கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு வளாகத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி விலை இருமடங்கு உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.60, பீன்ஸ் ரூ.70 , கேரட் ரூ. 90 , பீட்ரூட் ரூ. 40 , கத்தரிக்காய் ரூ.60 ரூபாய் என விற்பனையாகின்றன.
உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 80 ரூபாய், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கனமழை தொடர்ந்து, வரத்து குறைந்தால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.








