தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மழை வெள்ள பாதிப்புகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மழை வெள்ள பாதிப்புகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலை பெத்தேல் நகர் பகுதிக்கு சென்ற அமைச்சர், அங்கு மழைநீர் வெளியேறும் கால்வாய்களை ஆய்வு செய்தார். அங்கு தேங்கியுள்ள மழை நீரினை விரைவாக வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழையால், செய்யூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் மற்றும் பவுஞ்சூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனமழை காரணமாக கொளப்பாக்கம் பகுதிக்குட்பட்ட மேக்ஸ்வொர்த் நகர், ராமமூர்த்தி நகர், ராதாகிருஷ்ணன் நகர், சபாபதி நகர், மற்றும் பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் தரைதளத்தில் வசிக்கும் மக்கள் மாடிகளில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சாலைகளில் மழைநீர் வடியாத காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர், இந்நிலையில், கனமழையின் காரணமாக கரும்பாக்கம் விரால்பாக்கம், ராயல்பட்டு ஆகிய ஏரிகள் திடீரென உடைந்து வெளியேறிய வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் மூழ்கியது. பலவீனமான கரைகள் குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.