தொடர்மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தை அடுத்த மேட்டுப்பாளையம், பூவரசங்குப்பம், சிறுவந்தாடு, ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் வயல்வெளிகளில் நீர் தேங்கியது. இதனால், நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்துள்ளதால், சம்பா போகம் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







