இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வங்கக்கடலில் தொடர்ந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ராமேஸ்வரத்திலிருந்து விசை படகுகள் மூலம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் 55 பேரையும் 8 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந் புதுக்கோட்டை ஜகதாப்பட்டினம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 14பேரையும் அவரது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 69 மீனவர்களும் 10 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய இணையமைச்சரும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.








