தனது உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகளை ரசிகர்கள் நம்பக் கூடாது என்பதற்காக தான் நலமாக இருப்பதாகக் கூறி பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா வீடியோ வெளியிட்டார்.
300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா (86) மும்பை தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அண்மையில் அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். எனினும் அவரது உடல் நலம் குறித்து தொடர்ந்த வதந்திகள் உலா வந்தன.
இந்நிலையில், அவரே வீடியோவில் தோன்றி பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளமான டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், “நண்பர்களே. நேர்மறையாக சிந்தியுங்கள். நேர்மறை எண்ணத்துடன் வாழுங்கள். வாழ்க்கையும் நேர்மறையாக இருக்கும். நான் அமைதியாக வாழ்கிறேன். உடல்நல பாதிப்பு எனக்கு இல்லை. வதந்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். பிறரை நேசியுங்கள். வாழ்க்கை அழகாக இருக்கும்” என்றார்.
Friends, With Love to You All 💕. pic.twitter.com/o4mXJSBDyF
— Dharmendra Deol (@aapkadharam) June 6, 2022
அந்த வீடியோவில் 1969ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வரிகளையும் குறிப்பிட்டார். முன்னதாக, தர்மேந்திராவின் மகன்களும் நடிகர்களுமான சன்னி தியோல், பாபி தியோல் ஆகிய இருவரும் தந்தையின் உடல்நலம் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று ரசிகர்களிடம் தெரிவித்தனர்.
-மணிகண்டன்







